கொலை வழக்கில் அப்ரூவராக மாறி, கூடலூர் சிறையில் அடைக்கப்பட்ட கைதி, கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை காந்தள் புதுநகர் பகுதியை சேர்ந்த, கியூ பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த முஸ்தபா என்பவரின் காரில் இருந்து, பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முஸ்தபா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இந்த நிலையில், காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண், காந்தள் புதுநகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி மாஹி என்பது தெரியவந்தது. மேலும், முஸ்தபாவுக்கும், மாஹிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மாஹியை வெளியே அழைத்து வந்து கொலை செய்ததை முஸ்தபா ஒப்பு கொண்டதால், சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தில் இரண்டாவது குற்றவாளியாக கூறப்படும் உதகை விடுதி பணியாளரான சேகர் என்பவர் அப்ரூவராக மாறிய நிலையில், கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு, விசாரணையின் போது, காவலர்கள் தாக்கியதில் சேகரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சேகர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து, சேகர் மரணத்திற்கு போலீஸாரே காரணம் என கூறி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.