கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் திருமலையில் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்கள் காத்திருப்பு அறையில் பல மணி நேரம் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் இன்று முதல் 31ம் தேதி வரை நேரடி தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். தர்ம தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரடி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பதியிலுள்ள அலிபிரி சோதனை சாவடி மற்றும் நடைபாதை மார்க்கங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவாக ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், பக்தர்கள் ஒரே நாளில் இரண்டு மூன்று முறை ஏழுமலையானை வழிபடுகின்றனர்.