டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? – டெபாசிட் இழப்பு என்றால் என்ன?

தேர்தல் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை `டெபாசிட் இழப்பு’. `டெபாசிட் கூட வாங்கமுடியாது’ என்று குறிப்பிட்ட வேட்பாளர்களையோ, கட்சிகளையோ கலாய்ப்பதை கேட்டிருப்போம். சரி… அது என்ன டெபாசிட் இழப்பு. அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து பார்ப்போம்..

டெபாசிட் என்றால் என்ன?

கட்சிசார்பாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தன்னைப்பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். இந்த நடைமுறை வேட்புமனு தாக்கல் எனப்படுகிறது. அப்படி வேட்புமனு தாக்கல் செய்யும் ஒருவர் கூடவே, குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக கட்டவேண்டும். அதாவது டெபாசிட்டாக கட்ட வேண்டும்.

இந்த டெபாசிட் தொகையானது தேர்தலுக்கு தேர்தல் மாறுபடுகிறது. உதாரணமாக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான டெபாசிட் தொகை வேட்பாளர் ஒருவருக்கு 10,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு 25,000 ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது.

டெபாசிட் காலி என்றால் என்ன?

மேற்கண்டவாறு தேர்தலில் போட்டியிடும் ஒருவர், வேட்புமனுக்காக செலுத்தும் டெபாசிட் தொகையானது அந்த வேட்பாளருக்கு திரும்ப கொடுக்கப்படும். எப்போது என்றால், சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கு அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால் மட்டுமே அவருக்கு டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். உதாரணமாக, ஒரு தொகுதியில் 60 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தால், போட்டியிடும் வேட்பாளர் 1லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கவேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் அவரது டெபாசிட் காலியாகிவிடும். அதாவது டெபாசிட் இழப்பு. அவருக்கான வைப்புத்தொகையை தேர்தல் ஆணையம் திரும்ப தராது.இதைத்தான் டெபாசிட் காலி என்கிறார்கள். இந்த டெபாசிட் இழப்பு என்பது குறிப்பிட்ட வேட்பாளருக்கு சம்பந்தபட்ட தொகுதியில் செல்வாக்கு இல்லை என்பதை உணர்த்தும் குறியீடாகவும் கருதப்படுகிறது.

 

Exit mobile version