ஆயுத பூஜையையொட்டிச் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியாகத் தமிழகப் போக்குவரத்து துறை சார்பில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், ஆயிரத்து 695 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி வழியாகச் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லியில் இருந்தும் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து புறப்படுகின்றன. மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 6,145 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.