குஜராத் மாநிலம் வதோதராவில் கனமழை காரணமாக ஆறு பேர் பலியாகியுள்ளனர். தொடர் கனமழையால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. 12 மணி நேரங்களில் 442 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பலத்த மழையால், நகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆஜ்வா நதியிலும் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழையால், வதோதரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழையால் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.