ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த மூதாட்டி ஒருவரின் மீது சங்கர் மிஸ்ரா என்ற சக பயணி மதுபோதையில் சிறுநீர் கழித்தார். இந்தச் செய்தியானது மிகப்பெரும் அதிர்ச்சியை அளித்திருந்த நிலையில், அந்த மூதாட்டி இது தொடர்பாக கடந்த 2022 நவம்பர் 27ஆம் தேதி டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அவர்களுகு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அந்த மூதாட்டியிடம் சாமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால் அப்பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மெளனம் சாதித்து வந்தது. இம்மாதம் ஜனவரி 4ஆம் தேதிதான் ஏர் இந்தியா நிறுவனம் போலிசாரிடம் புகார் அளித்துள்ளது. இதனால் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா என்ற குடிபோதையில் சிறுநீர் கழித்தப் பயணியின் மீது ஐபிசி பிரிவுகள் 294,509,510 ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையினை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற அந்தப் பயணியை அவர் வேலைப்பார்த்த அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான வெல்ஸ் பார்கோ அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அவர் அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்த சம்பவத்தில் முதலில் அமைதிகாத்து மோசமாக நடந்துகொண்ட ஏர் இந்தியா நிறுவனம் மீது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியது. மேலும் இந்தச் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத ஏர் இந்தியா நிறுவன இயக்குநருக்கு ரூபாய் 3 இலட்சம் அபராதமானது விதிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பாக டிஜிசிஏ எர் இந்தியா நிறுவன மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் சம்பவம் நடந்தபோது விமானத்தை ஓட்டிய பைலட்கள், ஊழியர்கள் சிறுநீர் கழித்தப் பயணியின் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து டிஜிசிஏ இன்று பிறப்பித்த உத்தரவில், ‘ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 30 இலட்சம் அபராதம்’ விதித்தது. பிறகு சம்பவத்தன்று விமானத்தை ஓட்டிய பைலட்டின் லைசன்ஸை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்தச் சம்பத்தை செய்த சங்கர் மிஸ்ராவிற்கு விமானத்தில் பயணிக்க 4 மாதங்கள் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version