அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரிப்பின் போது தெரிவித்தார். மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக, அம்மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், நாங்குநேரி, வாகையடிமுக்கு ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
இதையடுத்து மேலப்பாளையத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் குரல் எழுப்பியது அதிமுக என்றும், அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும் என்றும் கூறினார். உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி பட்டாசு தொழிலில் இருக்கும் தடைகள் களையப்படும் என விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டியில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
விலாசம் தேடி தந்தவர்களுக்கு துரோகம் செய்தார்கள் சிலர் என முதலமைச்சர் பழனிசாமி உருக்கமாக பேசினார். விருதுநகர் நாடாளுமன்றத்தொகுதி கூட்டணி வேட்பாளர் அழகர்சாமிக்காவும், சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கு ஆதரவாகவும், படந்தால் கிராமத்தில் வாக்குசேகரித்தார்.
சாத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நிலையான கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து அனுப்பங்குளத்தில் முதலமைச்சர் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.