செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான வீரா. இவர் சொந்தமாக பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை வைத்து மறைமலை நகரிலுள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வீராவை தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், வீடு ஒன்றை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றும் வேலை இருப்பதாக் கூறி அழைத்துள்ளார்.
இதனால் தனது வாகனத்தை எடுத்துகொண்டு பொத்தேரி வழியாக சென்று கொண்டிருந்தார் வீரா. அப்போது வீராவை மடக்கிய மர்ம நபர்கள் சிலர், அவரை சராமாரியாக வெட்டத்தொடங்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.வீராவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்த போலீசாருக்கு, அவர் வேலை செய்த கேஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமார் மீது பார்வை திரும்பியது.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தன்னுடைய மனைவியிடம் வீரா நெருக்கமாக பழகி வந்ததால், சதேகமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து வீராவை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், மேலாளர் சுகுமார், கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்த தினகரன், புதுச்சேரி மாநிலம் சஞ்சீவி நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் புரனாங்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வமணி ஆகிய நான்கு பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரனடைந்துள்ளனர். அவர்களை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.