தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை அதிமுக தொண்டர்கள் மிக மிக அடக்கமாகவும், கொரோனா நெறிகளுக்கு உட்பட்டும் கொண்டாட வேண்டுமென அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையின்போதும் முடிவுகள் அறிவிக்கும்போதும் அண்ணா வழியில் அமைதியாகவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் தொண்டர்களும், நிர்வாகிகளும் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது இன்றியமையாதது எனக்கூறியுள்ள அதிமுக தலைமை, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, முகவர்களும் தொண்டர்களும் முழுமையாக பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. ) கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக திகழும் அதிமுகவினர், வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு நொடிக்கூட மீறிவிடக்கூடாது என்றும், வெற்றிக்கொண்டாட்டங்களை மிக மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டும் அடக்கத்துடனும் நடத்திட வேண்டுமென்றும் கூறியுள்ளது. பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் செல்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.