விருதுநகரில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த பெண் ஏட்டை, அவரது கணவர் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த பானுப்பிரியா, தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் சூலக்கரை பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்தார்.
இவரது கணவர் விக்னேஷ் கை நிறைய சம்பளம் பெறும் அரசு வேலையில் இருந்தாலும், வருமானம் முழுவதையும் டாஸ்மாக்கிலேயே தொலைத்துள்ளார்.
நாள் முழுக்க பாதுகாப்பில் பணியில் கால் கடுக்க நிற்கும் பானுப்பிரியா, வாங்கும் சம்பளத்தை வைத்து தான் இரு குழந்தைகளின் பசியாற்றி உள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் குடிக்க பணம் தர கேட்டு பானுப்பிரியாவை பாடாய் படுத்துவதை வாடிக்கையாய் வைத்திருந்துள்ளார். வளரும் குழந்தைகளை வைத்து கொண்டு வாய் கூசும் வார்த்தைகளால் அவரை காயப்படுத்தியுள்ளார்.
காக்கி சட்டையும், பாலிஷ் போட்ட பூட்ஸுமாக வெளியில் மிடுக்காக திரிந்தாலும், பானுப்பிரியாவிற்கு வீட்டில் தினம் தினம் சித்ரவதைகள் அரங்கேறி உள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் அரை போதையில் குடிக்க பணம் கேட்டு மனைவியை நச்சரித்துள்ளார் விக்னேஷ்.
அவர் பணம் தர மறுக்கேவே தகராறு முற்றியுள்ளது. இதில் மனைவியின் பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை பலமாக நெரிக்க அவர் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பானுப்பிரியாவின் அலறம் சத்தம் கேட்டு அண்டை வீட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்த அவர்கள் பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது கணவரை விக்னேஷை கைது செய்தனர்.
பெண்களுக்கு நேரும் வன்முறைகளை தடுக்கும் பணியில் உள்ள பெண் காவலரே வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.