சதுரங்க வேட்டை பட பாணியில், 900 கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
மணச்சநல்லூரை அடுத்த தில்லை நகர் 4-வது குறுக்கு சாலையில் செந்தூர் பின்கார்ப் என்ற தனியார் நிதி நிறுவனம் இரண்டு வருடமாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு உரிமையாளர்களாக கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் – பாரதி தம்பதி செயல்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் என 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்யும் நபருக்கு நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் வீதம் 20 நாட்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 900 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனம் உறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் மற்றும் முதலீட்டு தொகையை தராமல் ஏமாற்றியதுடன், நிறுவனத்தையும் மூடிவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினர்.