மக்களவை தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க செய்யும் வகையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேசிய மற்றும் மாநில கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிகளவிலான மக்களை வாக்களிக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வாக்கின் முக்கியத்துவத்தை அரசியல் தலைவர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த மக்களவை தேர்தலில் மக்கள் அதிகளவில் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோன்று அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர் கான், மோகன்லால், நாகர்ஜூனா, ரன்வீர், தீபிகா படுகோன், அலியா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிவி சிந்து, சாய்னா, கும்ப்ளே, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்கின் முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு செல்ல ஆன்மிக தலைவர்களான சத்குரு, ராம்தேவ் உள்ளிட்டோருக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.