பணத்தகராறில் நண்பனை தீர்த்துக் கட்டிய பயங்கரம்!!

நாமக்கல்லை அடுத்த வகுரம்பட்டியைச் சேர்ந்தவர் 33 வயதான தினேஷ். இவர் சொந்தமாக மளிகைக் கடையும், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.இவரைப்போலவே, நாமக்கல் ஆண்டவர் நகரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.

தினேஷூம், நரேஷ்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள். அந்தப் பழக்கத்தில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தினேஷிடம் நரேஷ்குமார் குறைந்த வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றார். அந்தப் பணத்தை நரேஷ்குமார், கூடுதல் வட்டிக்கு விட்டுத் தொழில் நடத்தி வந்தார்.

ஆரம்பத்தில் தொழில் சரியாக நடந்ததால், தினேஷூக்கு சரியாக நரேஷ்குமார் வட்டி கொடுத்து வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் தொழில் சரியாக நடக்காததால், தினேஷூக்கு, நரேஷ்குமாரால் சரியாக வட்டியும் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பித் தர முடியவில்லை. கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட இந்தத் தொய்வு, நண்பர்களுக்குள் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி, தினேஷின் மனைவியும், அவரது குழந்தைகளும் வெளியூர் கிளம்பிச் சென்றனர். அதையடுத்து, வீட்டில் தனியாக இருந்த தினேஷ், தனது நண்பர்களான நரேஷ் மற்றும் அஜீத், மதன்ராஜ் ஆகியோரை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று வந்த நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து தினேஷ் மது அருந்தியுள்ளார்.

அப்போது, தினேஷூக்கும், நரேஷூக்கும் இடையில் பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான பேச்சு வந்தது. உடனே, தனது 30 லட்சம் ரூபாய் கடனை எப்போது திருப்பித் தரப் போகிறாய் என தினேஷ், நரேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. வீட்டிற்கு அழைத்து மது ஊற்றிக் கொடுத்து, நண்பர்கள் முன்னிலையில், கடனைக் கேட்டு தகராறு செய்த தினேஷ் மீது ஆத்திரம் அடைந்த நரேஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திக் கொலை செய்ய முயன்றார். நரேஷ்குமாரின் அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத, தினேஷூம், அவரது நண்பர்களான மதன்ராஜ் மற்றும் அஜீத் ஆகியோர், சுதாரித்துக் கொண்டு நரேஷ்குமாரை மடக்கிப் பிடித்தனர். மேலும், அவரது கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி, அவரைத் திருப்பிக் குத்தி உள்ளனர். அதில் அந்த இடத்திலேயே நரேஷ்குமார் உயிரிழந்தார்.

அதையடுத்து, நாமக்கல்லை அடுத்த வசந்தபுரத்தில் தினேஷூக்குச் சொந்தமாக உள்ள தோட்டத்தில், நரேஷ்குமாரின் உடலைப் புதைக்க எடுத்துச் சென்றனர். ஆனால், அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், வேறு வழியின்றி நரேஷ்குமாரின் சடலத்தை மீண்டும் தினேஷின் வீட்டிற்கே கொண்டு வந்தனர். அங்கு பூச்செடிகள் நடுவதற்காக விடப்பட்டிருந்த இடத்தில் குழி தோண்டி நரேஷ்குமாரின் சடலத்தைப் புதைத்தனர். அடுத்த நாள் தினேஷூம் அவரது நண்பர்களும் ஒன்றும் நடக்காததுபோல், வழக்கம் போல் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

ஆனால், மூன்று நாட்களுக்கு முன்னால், வீட்டைவிட்டுச் சென்ற நரேஷ்குமார், அதன்பிறகு வீடு திரும்பாததால், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்தனர். எங்கும் நரேஷ்குமார் கிடைக்காத நிலையில், தினேஷ் வீட்டிற்கு வந்த நரேஷ்குமாரின் தாயார், தனது மகன் கடைசியாக உனது வீட்டிற்குத்தான் வந்தான் என்றும், அவனை எங்கே என்று கேட்டும் அழுதுள்ளார்.

அதையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், நாமக்கல் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு, தனது நண்பன் நரேஷ்குமாரைக் கொலை செய்து புதைத்த விபரங்களைச் சொல்லிவிட்டு, அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரணடைந்தார். உடனே களத்தில் இறங்கிய காவல்துறையினர், தினேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவத்தை நடித்துக் காட்டச் சொல்லி விசாரணை நடத்தினர்.

Exit mobile version