விமானம் தரையிறங்கிய போது கட்டடத்தில் மோதி விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கிய போது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர்.

ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான் கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து யூலன்- ஊடே நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது.

இதனையறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான் கார்ஸ்க் விமான நிலையத்துக்கு திருப்பினர். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற விமானம், அங்கு உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டடத்தின் மீது மோதி, விமானத்தில் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். இதையடுத்து பயணிகள் 43 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version