இந்தியா – ரஷ்யா 2+2 பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்து

ரஷ்யாவின் ஏகே 203 வகையை சேர்ந்த 5 லட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோய்கு இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில், ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் ஏகே 203 வகையை சேர்ந்த 5 லட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கு இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

ரஷ்யாவின் கலாஸ்நிகோவ் நிறுவனத் தயாரிப்பான ஏகே 203 வகைத் துப்பாக்கி குறைந்த எடை, வலிமை, பயன்பாட்டில் எளிமை ஆகிய சிறப்புகளை கொண்டது.

இதன் மூலம் 300 மீட்டர் தொலைவு உள்ள இலக்கை குறிபார்த்து கூட முடியும். கடந்தாண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோ சென்றபோது, ஏகே 203 வகை துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் ஏகே 203 வகையை சேர்ந்த 5 லட்சம் துப்பாக்கிகளை உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version