சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், பணப்பரிமாற்றம் சதி திட்டம் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் கீழ் தான் நடந்துள்ளது என்றும், கிடைத்துள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளதாகவும் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது திமுக ஆட்சியின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் மற்றும் உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறை மோசடியில் முக்கிய நபராக செந்தில் பாலாஜி செயல்பட்டு உள்ளார் என்றும், போக்குவரத்து அமைச்சராக இருந்த அவர் தனது அதிகாரத்தை ஊழல் மற்றும் சட்டவிரோதமாக செயல்பாடுக்கு தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி திட்டமிட்டு சட்டவிரோத வருமானத்தை பெற்றுள்ளார் என்றும், அவரது சகோதரர், தனி உதவியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட சக அதிகாரிகளுடன் சேர்ந்து போக்குவரத்து துறையில் மோசடியை அரங்கேற்றி உள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அப்போது அவர் தெரியாது எனக்கூறி மறுத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் விசாரணையில் உதவியாளர்கள் கார்த்திகேயன், சண்முகத்துடனான தொடர்புகள் குறித்து தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை காவலின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், பணப்பரிமாற்றம் சதி திட்டம் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் கீழ் தான் நடந்துள்ளது என்றும், கிடைத்துள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பணத்தை வசூலித்தது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சகோதரர் அசோக் மற்றும் கூட்டாளிகள் மூலம் பணத்தை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
வேலைக்காக பணத்தை கொடுத்தவர்களுக்கு ஆதரவாக தேர்வு மதிப்பெண்களில் முறைகேடாக மதிப்பெண்களை திருத்தி இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் மற்றும் சட்டவிரோதமாக பணத்தை பெற்று குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
அதில் கிடைத்த வருமானத்தை நேரடியாக அவர் பெற்றுள்ளார் என்பதையும், மோசடியாக பெற்ற பணத்தை குடும்பம் மற்றும் தனக்கு நெருங்கியவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார் என்றும், குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் அவரது உதவியாளர்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருப்பது மூலம் செந்தில் பாலாஜிக்கும் அவரது பி.ஏ-க்களுக்கும் இடையேயான தொடர்பு உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் டிரைவர்கள், நடத்துனர்கள், ஜூனியர் டிரேட்ஸ்மேன், ஜூனியர் என்ஜினியர்கள், உதவி பொறியாளர்கள் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பதவிக்கும் வசூலித்த பணம் தொடர்பான ஆவணங்கள், MTC, TNSTC -யில் உள்ள மொத்தப் பணியிடங்கள் மற்றும் பிஓசியின் பணி தொடர்பான ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் காணப்படுகின்றன என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
MTC, TNSTC-க்களில் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோருக்கு இடையே மின்னஞ்சல் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
செந்தில் பாலாஜியின் வங்கி கணக்குகளில் 1 கோடியே 34 லட்சம், அவரது மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம், ரொக்க வைப்புத் தொகையாக 13 கோடியே 13 லட்சம் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அசோக் குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலாவின் வங்கி கணக்கில் தலா 53 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் இருந்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
வைப்புத் தொகையாக சண்முகத்தின் வங்கிக் கணக்குகளில் 2 கோடியே 19 லட்சம் ரூபாய் இருந்தது என்றும், இந்த பண வைப்புத்தொகை வருமான வரிக் கணக்கில் வெளியிடப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
வேலைக்காக விண்ணப்பித்தவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியின் பி.ஏ. சண்முகத்திடம் டெபாசிட் செய்யப்பட்டதாக சாட்சிகள் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 1.34 கோடி பணம் முதலீடு செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில்
செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2013- 14 மற்றும் 2021- 22 காலகட்டத்தில்
இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரது மனைவி மேகலா 29.55
லட்சம் ரூபாய் பணத்தை 2014-15 முதல் 2019- 20 காலகட்டத்தில் பெற்றுக்
கொண்டதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள நபர்கள் அதற்கு உண்டான மதிப்பெண்களை விண்ணப்பித்தவர்களுக்கு பென்சில் மூலமாக மட்டுமே மதிப்பெண்களை பதிவிட்டது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது
நேர்காணலில் போடப்பட்ட மதிப்பெண்கள் பென்சிலில் போடப்பட்ட காரணத்தினால் யார்- யாரெல்லாம் செந்தில் பாலாஜியின் கூட்டாளியிடம் வேலைக்காக பணம் கொடுத்தார்களோ? அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் மாற்றப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் பணி வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சண்முகம் ஆகியோர், செந்தில்பாலாஜியின் உத்தரவை அதிகாரிகளுக்கு கூறியதன் அடிப்படையில் போக்குவரத்துறை அதிகாரிகள் அந்த உத்தரவை பின்பற்றியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post