“கனிமொழி & ஆ.ராசா கைதானபோதுகூட பதறாத ஸ்டாலின், செந்தில்பாலாஜி கைதால் தங்கள் ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடுமோ என்று பயப்படுவது குறித்து அலசுகிறது நியூஸ் ஜெ தலையங்கம்.
வழக்கமாக உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதில் அளிக்கும் ஸ்டாலின், இந்த முறை செந்தில்பாலாஜி கைது விவகாரத்தால் பதற்றமான நிலையில் வீடியோ பேசி வெளியிட்டிருக்கிறார். நான் அடிச்சா தாங்கமாட்ட… நாலுமாசம் தூங்கமாட்ட என்னும் திரைப்பட பாடல் ரேஞ்சுக்கு, தனது பதற்றத்தை மறைப்பதற்காக வாய்சொல்லில் வீரம் காட்டியிருக்கிறார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வாயை திறந்தால் அவ்வளவு தான் என சேலஞ்ச் செய்திருக்கிறார். தன்னை சீண்டிப் பார்க்க வேண்டாம். மீறினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று மிரட்டி கடுமையான சொல்லாடல்களை பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், திமுக இப்போது தள்ளாட்டத்தில் தான் இருக்கிறது என்பதை அவரது முகக்குறிப்புகளே உணர்த்தியது.
தனது அமைச்சரவை சகா செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை நடவடிக்கையால் கைதாகி, நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படி அவசர அவசரமாக வீடியோவில் பேசி வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான், அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.
அலைக்கற்றை வழக்கில் தங்கை கனிமொழியும், ஆ.ராசாவும் கைதானபோது இவ்வளவு பதற்றங்கள் ஸ்டாலினிடம் காணப்படவில்லை என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள் சீனியர் செய்தியாளர்கள். நிழல் போல கூடவே சுற்றிவந்த தி.நகர் ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஸ்டாலின் இவ்வளவு ஆவேசம் காட்டவில்லை என்பதும் அவர்களின் தகவல்.
ஆனால் செந்தில்பாலாஜிக்காக ஆவேசப் படக்காரணம் எங்கே அவர் தன்னையும், தனது குடும்பத்தையும் வம்பு வழக்கில் இழுத்துவிட்டு விடக்கூடாதே என்கிற அச்சம்தான். இதனை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையிடம் பல்வேறு முக்கிய தகவல்களை செந்தில்பாலாஜி சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் உள்ளதாகவும், பதவிக்காக எதைவேண்டுமானலும் செய்யும் ஸ்டாலினின் குடும்பம் ஒரு பச்சோந்தி எனவும் எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். விடியா அரசை தமிழ்நாடே காரித் துப்புகிறது என விளாசியிருக்கிறார் அவர்.
கனிமொழியும் ஆ.ராசாவும் கைதானபோதுகூட பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவதற்கு காரணம் எங்கே திமுக ஆட்சி பறிபோய்விடக்கூடாதே என்பதால்தான். அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது போல செந்தில்பாலாஜி விவகாரத்தில் விடியா அரசை தமிழக மக்களே காரி துப்புவதும் உண்மைதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்.
Discussion about this post