இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்தார். அதில் முல்லைப் பெரியாறு அணைக் கட்டி பொதுமக்களின் தாகம் தீர்த்த பென்னி குயிக்-ன் மார்பளவு சிலையானது லண்டனில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சிலைக்கு கருப்புத் துணி அணிவித்திருக்கிறார்கள் என்றும், சிலை சேதமடைந்துள்ளது என்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்தி பரவிவருகிறது. இச்சிலையினை திறக்க காரணமாக இருந்த திமுக அமைச்சர் பெருமக்கள் அச்சிலைக்கு ஒரு பாதகமான நிலை இருக்கும் போது அமைதி காப்பது தவறு.
இந்த சிலை அமைப்பதற்காக அட்லண்ஸ் என்கிற நிறுவனத்திடம் தமிழக அரசு தொடர்புகொண்டு ரூ.26 லட்சம் பணத்தை வழங்கியதாகவும், ரூ92 லட்சம் மொத்த செலவானதாகவும், 20 லட்சம் ரூபாய் பென்னிகுயிக் குடும்பத்தினர் வழங்கியதாகவும், மீதமுள்ள 46 லட்சம் ரூபாய் தொகையினை அட்லாண்ஸ் நிறுவனத்திற்கு வழங்காத காரணத்தால் அந்நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் லண்டன் மாநகர கவுன்சில் சிலை அகற்றப்படும் என்றும், தற்போது கருப்புத் துணியால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அச்சிலை அமைக்க ஒருங்கிணைப்பாளராக இருந்த பீர்ஒளி தகவல் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலை என்ன என்பது குறித்து அறிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிலை சேதமடைந்திருந்தால் அதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
Discussion about this post