ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிட கோரி, அவருடைய தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி, கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
Discussion about this post