ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனிடையே பிரபல தொலைக்காட்சியான இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில சட்டப்பேரவையில் உள்ள 175 இடங்களில் 100 முதல் 110 இடங்கள் வரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிடிப்பதன் மூலம் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்பார் என கணித்துள்ளனர். அதேசமயம் ஆளுங்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, 40 முதல் 45 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என கணித்திருக்கும் இந்தியா டிவி, ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் வெறும் 7 இடங்களை மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 18 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post