பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் நிறுவன பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குநர் நீதிபதிகள் முன்பு ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பால் விற்பனைக்கு உரிமை பெற்றவர்கள் குறித்த விவரம், கலப்படம் தொடர்பான வழக்குகள், தண்டனை விவரங்கள், இதுகுறித்த ஆய்வுகள் ஆகியவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Discussion about this post