கோவை வ.உ.சி மைதானத்தில் 73-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், 129 பயனாளிகளுக்கு 4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், மதுரையில் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, 124 பயனாளிகளுக்கு 40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களை கவுரவிக்கும் விதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அணிவகுப்பு நடத்தப்பட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் வேளாண் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோட்டில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட அவர், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 152 பயனாளிகளுக்கு 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். இதை அடுத்து நடந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
கடலூரில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டது. பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடையை மாவட்ட ஆட்சியர் அணிவித்து மரியாதை செலுத்தினார். வேளாண் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 10 துறைகளில் 104 பயனாளிகளுக்கு 1 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 382 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தேசியக் கோடியை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் அரசு துறைகளின் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. 429 பயனாளிகளுக்கு 2 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில் சமாதான புறாக்கள் மற்றும் வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இங்குள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை போன்ற அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தேசிய கொடியை ஏற்றி பயனாளிகளுக்கு 10 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார். விழாவின் இறுதியாக மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நிறைவு பெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 670 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் சுதந்திர பேராட்ட தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வீரத்தியாகத்தை போற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சுதந்திர தின பேரணி நடைபெற்றது. தனியார் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணியாக சென்றனர்.
தருமபுரி மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 73வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அணிவகுப்பை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியில் 172 பயனாளிகளுக்கு 7 கோடியே 87 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.