கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டும் உபரி நீரின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. தற்போது பருவமழை குறைந்ததால் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 7 ஆயிரத்து 22 கனஅடியும், கபினியில் இருந்து 642 கன அடி என மொத்தம் 7 ஆயிரத்து 664 கன அடியாக தமிழகத்துக்கு வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து குறைந்து தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்து குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 12-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.