உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 90 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலம், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரயாக் ராஜ் நகரில் 11 சென்டிமீட்டரும், வாரணாசியில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. வாரணாசி நகரின் அனைத்துச் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால் சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாகனங்கள் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களில் கன மழை, வெள்ளம் தொடர்பான நிகழ்வுகளில் 70 பேர் உயிரிழந்தனர்.