தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது. நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாயும் பெறுவார்கள்.