கோவையில் வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன. தங்க பெட்டகம் போன்று செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சொந்தமான தங்க கட்டிகளை சேகரித்து வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 149 கிலோ எடைக்கொண்ட தங்க கட்டிகளுடன் அந்நிறுவனத்தின் வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. புளியங்குளம் அருகே சென்றுக் கொண்டிருந்த வேனை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, எடுத்துச் செல்லப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்காததால், அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது