கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிர மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனிமைப்படுத்துதலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வாகனங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் இந்த நடவடிக்கை ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரி மற்றும் டெல்லி மாநிலங்களும் தங்கள் மாநில எல்லைகளை மூடியுள்ளன. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் பேருந்துகள் ரயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.