கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொழவிளை பகுதியை சேர்ந்தவர் பாலாசிங். ஓய்வு பெற்ற விஞ்ஞானியான இவரை தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் சேவைப்பிரிவில் இருந்து அழைப்பதாக கூறி தங்களின் ஏடிஎம் காலவாதி ஆகி விட்டதாக கூறியுள்ளார். புதிய ஏடிஎம் வழங்க, கார்டில் உள்ள 16 இலக்க எண்ணை தருமாறு கனிவான குரலில் கேட்டுள்ளார். பாலசிங்கின் அலைபேசிக்கு வந்த ஓடிபி எண்ணையும் அவரிடம் கேட்டு பெற்றுள்ளார். இது போல் 21 முறை பாலாசிங்கிடம் இருந்து ஓடிபி எண்ணை கேட்டுப் பெற்ற அந்த மோசடி பேர்வழி, ஒரு கட்டத்தில் திடீரென அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து பாலாசிங்கிற்கு மிகவும் தாமதமாக சந்தேகம் வர, தனது வங்கிக்கு சென்று விசாரித்த போது அவரது கணக்கில் இருந்த 12 லட்ச ரூபாயும் துடைத்தெடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானி, காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் ஆன்லைன் கொள்ளையனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.