"மக்களை வென்ற மன்னாதி மன்னன்"-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள்

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து நெகிழ்ந்து மகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.

தமிழ்நாட்டின் தன்னிகரற்ற நாயகன்! ஏழைப் பங்காளன்! புரட்சித் தலைவர்! பொன்மனச்செம்மல்! இதயக்கனி இன்னும் எண்ணற்ற புகழ் நதிகள் சங்கமிக்கும் ஒற்றைப் பெயர்க்கடல் – எம்.ஜி.ஆர்.

வாத்தியாரே என்று தமிழ்நாட்டு மக்கள் வாஞ்சையுடன் அழைக்கும் எம்ஜிஆர், 1917 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, இந்த பொன்னுலகில் ஒரு பூவாக மலர்ந்தார். மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன் என்பதே இவரது இயற்பெயர், ஆனால் இதயப்பெயர் என்பது என்றென்றும் மூன்றெழுத்து மந்திரமான எம்ஜிஆர் என்பதாகவே ஒலித்தது.

இளமையிலேயே வறுமையை சந்தித்ததால், நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அதன்பின் வானத்தையே தொட்டாலும், ஏழைப் பங்காளனாய், எளிமையானவராகவே வாழ்ந்தார்.

1936 ம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படத்தில் தொடங்கிய புரட்சித்தலைவரின் திரைத்துறை பிரவேசம், அடுத்தடுத்த படங்கள், மக்கள் மனதில் பெரும் தலைவன் என்ற பீடத்தை எம்ஜிஆருக்கு பெற்றுத்தந்தது. எந்த அளவிற்கென்றால், இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

சமூக பிரிவினைகள், முதலாளித்துவம், வறுமை என மக்களின் நல்வாழ்வைக் குலைக்கும் நாச சக்திகளை எதிர்க்கும் நாயகனாக திரையில் நடித்ததோடு மட்டுமின்றி, நிஜத்திலும் அப்படியான வாழ்க்கையையே எம்ஜிஆர் வாழ்ந்தார்.

அண்ணாவின் அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், இயக்கத்தில் சேர்த்து, அவரது கொள்கைக் கொழுந்தை பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பீரங்கியாக செயல்பட்டார்.

பின்னர், 1972-ம் ஆண்டு, அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை, அறத்தின் உருவமாக ஆக்கினார். அது அகில இந்திய அளவில் உயரவும் வழிவகை செய்தார். அதன் மூலம், அவர் மனங்களை ஆண்ட தமிழ் மக்களை, 10 ஆண்டுகள் முதலமைச்சராக ஆண்டார். அவரது ஆட்சி இன்றுவரை பொற்காலம் என பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது.

வறுமையால் பல பொழுதுகளில் பசியை உணர்ந்த வள்ளல், இனியொரு ஏழை பசியால் வாடக்கூடாது என்று சத்துணவுத்திட்டத்தை தொடக்கினார். அடுத்தடுத்து ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாய் சேய் நல இல்லங்கள், இலவச பாடநூல் திட்டம் உள்ளிட்ட பெயர் சொல்லும் பல மக்கள் நல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி புரட்சிக்கு வித்திட்டார்.

பிறந்த நாடே சிறந்த கோயில் என்றும், பேசும் மொழியே தெய்வம் என்றும் பொதுவுடமையின் புதிய பூமி படைத்த புரட்சி நாயகன் எம்ஜிஆர். உழைப்பின் உருவம் எம்ஜிஆர். உள்ளத்தால் எளிமை எம்ஜிஆர். உறுதியின் வடிவம் எம்ஜிஆர். அழைக்காமல், கேட்காமல் கொடுக்கும் மழையும் எம்ஜிஆர். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தது என்று சிலுப்பிய சிங்கத்தை நினைத்து நெகிழ்வோம்! புகழ்ந்து மகிழ்வோம்! இனி நாளை நமதாகும்!

நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி!

 

Exit mobile version