வதந்திகளை நம்பி புதிய தபால் கணக்குகளை திறக்க குவிந்த மக்கள்

தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருவதாக வெளியான வதந்தியை நம்பி கடந்த மூன்று நாட்களில் 1050 தபால் கணக்குகள் மூணாரில் தொடங்கப்பட்டுள்ளன.

தபால் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை பிரதமர் மோடி வழங்குவதாக பரவிய வதந்தியை அடுத்து கேரளா மாநிலம் மூணாரில் உள்ள தபால் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது. தபால் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து அந்தப்பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக நீண்ட வரிசையில் தபால் நிலையத்தின் முன் வரிசையாக நின்றனர். பிரதமர் மோடி இதுபோன்ற எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை, வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்தும் மக்கள் கலைந்து செல்லாமல் புதிய தபால் கணக்குகளை திறப்பதற்காக குவிந்தனர். இதனை அடுத்து தபால்துறையின் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. பொய்யான வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version