அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கத்தி இன்றி ரத்தம் இன்றி, நம் நாட்டுக்குச் சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர் காந்தி என்று புகழாரம் சூட்டினார்.
காந்தி உள்ளிட்ட தேச தலைவர்கள் தொடர்பான பாடங்களைப் பள்ளி கல்வியில் இடம் பெற செய்து, வருங்கால மாணவர்களைத் தேச பற்றுள்ள மாணவர்களாக உருவாக்குவோம் என்றும் சூளுரைத்தார்.
மேலும், அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.
அதேபோல், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கணினி மற்றும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறினார்.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள், விஞ்ஞான அறிவைப் பெற அவர்களுக்குத் தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.