ராமசாமி படையாட்சியாரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி சட்டப்பேரவை விதி எண்110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என்று முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும், ‘மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாட்சியாருக்கு, அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்’ என அறிவித்து, அதற்காக கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு கிண்டி ஹால்டா அருகில் உள்ள ராமசாமி படையாட்சியார் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.