இந்திய விமானப்படைக்கு ஃபிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர்விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்காமல் விமான துறையில் அனுபவமில்லாத ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்திய அரசின் நிர்பந்தத்தாலேயே ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்ததாக ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிராங்கோயிஸ் ஹாலண்டே (francois hollande) குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த இந்திய ராணுவ அமைச்சகம், ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் அவ்விரு நிறுவனக்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், எந்த வகையிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்திடம் முன்மொழியவில்லை என்றும், இதில் அரசுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.