பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைதானது இப்படிதான்..!

கோவையில் பேரிடர் பயிற்சியின் போது கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் பயிற்சியாளருக்கு போலிச் சான்றிதழ் தயாரிக்க உதவியவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியின் போது, 2-வது மாடியில் உள்ள ஷன் ஷேடு பகுதியில் இருந்து மாணவர்களை பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே குதிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, தொண்டா முத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க தயங்கியபோது, பயிற்சியாளர் அவரை கட்டாயப்படுத்தி கீழே குதிக்க வைத்தார். இதில், பலத்த காயமடைந்த மாணவி லோகேஸ்வரி, உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் போலி பயிற்சியாளர் என தெரியவந்தது. கல்லூரியில் பயிற்சிக்காக அனுமதி வேண்டி விண்ணப்பித்த கடிதத்தை ஆய்வு செய்ததில் அந்த கடிதமும் போலியானது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version