ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாலியல் வழக்கு தொடர்பாக, தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மேற்கு மகளிர் காவல்துறையினர், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக, மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை காவல்துறையினர் மீண்டும் அழைத்துச் சென்றனர். அப்போது, நீதிமன்ற வளாகத்திலிருந்த உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்ற நபர், ‘ஆசிரியரே’ காவல்துறையினர் உன்னை சும்மா விட மாட்டார்கள் என சத்தமிட்டார்.

இதை கவனித்த காவல்துறையினர், அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version