புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே, கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி பெற்றவர்கள் என அதிமுக அறிவித்துள்ளது.
வரும் 8-ந் தேதி முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கி, ஜுன் 30-ந் தேதி வரை நடைபெற்றதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கான படிவங்கள் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இளைஞர்களும், இளம் பெண்களும், பொதுமக்களும் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிய வண்ணம் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கி, ஜுன் 30-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் வரும் 8-ந் தேதி முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் என்று அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரசீது பெற்றுள்ளவர்கள் அதனைக் கொண்டுவந்து காண்பித்து, அதற்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜுன் மாதம் 31-ந் தேதிக்குப் பிறகு உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் கொடுத்து ரசீது பெற்றுள்ளவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள், தேதி வாரியாக படிப்படியாக தயார் செய்யப்பட்டு, உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அடிப்படை உறுப்பினர்களாக பதிவு செய்துகொண்டு, புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு பெற்றுள்ளவர்கள் மட்டுமே, நடைபெறவுள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.