பியூஷ்கோயல், தங்கமணி சந்திப்பு – நிலக்கரி ஒதுக்க வேண்டுகோள்

மத்திய மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று, மின்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில், டெல்லி சென்றுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்.

மத்திய மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பியூஷ் கோயலிடம் தங்கமணி கோரிக்கை விடுத்தார். தமிழக மின் நிலையங்களுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதை சுட்டிக் காட்டிய அவர், அதற்கு ஏற்றவாறு நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, மழை காரணமாக தமிழகத்தில் ஆயிரம் மொகாவாட் மின் பயன்பாடு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர், தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி இருப்பதால், மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version