கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கைதான முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை மறுத்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், கடந்த 19ஆம் தேதி பிராங்கோ ஆஜரானார். பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பேராயர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக வாடிகன் சபை அறிவித்தது.
இந்தநிலையில், 3 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, பிராங்கோவை போலீசார் கைது செய்தனர். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்ட, பாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின்போது, முன்னாள் பேராயர் பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அவரை 3 நாட்கள், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.