பாகிஸ்தானில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறகிறது. இதற்காக, அந்நாட்டில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பானு மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்ட எல்லைப் பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவிலிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட 95 பேர் இறந்தனர்.
150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. படுகாயமடைந்த மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.