ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏ- பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்- பாகிஸ்தானும் மோதியது.
அதன்படி, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக இமாம் உல்ஹக், பஹார் ஜமான் களம் இறங்கிய நிலையில், இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பாபர் அசாம் 47 ரன்களில் அவுட்டானார். இதனிடையே, பந்து வீசும்போது முதுகுவலியால், ஹர்திக் பாண்டியா கீழே விழுந்தார். இதனால், அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டதால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் சோயிப் மாலிக் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன்படி, 163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு, இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகார் தவான் 46 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து களம் இறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடி தலா 31 ரன்கள் எடுத்து அசத்தினர்.
இதனால், 29 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து, இந்தியா 164 ரன்களை எடுத்து, பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளும் மோதியதால், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், இந்தப் போட்டி வழக்கம் போல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.