எது பத்திரிகை சுதந்திரம் என்ற கேள்வியோடு இந்த செய்தியை துவக்குவோம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எது செய்தி என்ற கேள்விக்கு இவ்வாறான விளக்கத்தை அளித்தார். களத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை பார்த்து, அனைத்து கோணங்களையும் உள்ளடக்கி எழுதுவது ஒரு பாணி. மற்றொன்று அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே கற்பனை குதிரையை தட்டி மனதிற்கு தோன்றியது எல்லாம் எழுதுவது மற்றொரு பாணி. இதில் இரண்டாவது வகையில் கட்டுரைகள் எழுதியதே நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதுக்கு காரணமாகும்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தினார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 26-28 தேதியிட்ட வார இதழில் நக்கீரன் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் நிர்மலா தேவியின் வாக்குமூலம் என்ற பெயரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நான்கு முறை சந்தித்ததாகவும், ஆளுநரின் செயலர் ராஜகோபாலிடம் 130 மாணவிகளை அறிமுகம் செய்து வைத்ததாகவும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் நிர்மலா தேவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் அந்த வார்த்தைகள் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. கற்பனைத் தன்மையோடு எழுதப்பட்ட கட்டுரை என்பதற்கு இதுதான் சான்று.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் ஜாம்பஜார் போலீசார், சென்னை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். 124 (a) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேச துரோக வழக்கிலும் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுஒருபுறம் இருக்க, சமீபத்தில் யார், யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எதற்காக கைது செய்யப்பட்டுள்ளோர்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை துண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியும், பேசியும் வந்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்னெடுத்த பேரறிஞர் அண்ணாவே, தேசநலன் கருதி அந்த கோரிக்கையை கைவிடுவாக அறிவித்தார். அப்படிப்பட்ட மாநிலத்தில் இருந்து கொண்டு பிரிவினைவாதம் பேசுபவர்களை இந்த அரசு எப்படி மன்னிக்கும்? இந்தியா சிதறுண்டு போகவேண்டும் என்று நினைக்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அம்மா வழிவந்த அரசின் கடமையல்லவா?
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ, காவல்துறையினரின் அர்ப்பணிப்பும், கடமை உணர்வும் மிக முக்கிய காரணம். அப்படியிருக்கும் போது அதிமுக ஆதரவால் சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டு, இன்று சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட முக்குலத்தோர் புலிப்படை உறுப்பினர்களை கைது செய்ததால் ஆத்திரம் அடைந்து அடாத சொற்களை பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரிகளையே தாக்கப்போவதாக பேசுபவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தால், இந்த சமூகத்தில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று நிலை ஆகிவிடாதா? அப்புறம் சட்டம் – ஒழுங்கு என்ற வார்த்தைக்கு என்னதான் பொருள்?
இதே அடிப்படையில் தான் கற்பனையில் உதித்த யோசனைக்கு கண், காது, மூக்கு வைத்து கட்டுரை என்ற பெயரில் கட்டுக்கதை பரப்புவோரை கைது செய்யாவிட்டால் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தரக்குறைவாக எழுதி விட முடியும் என்ற நிலை உருவாகி விடாதா?
அந்த வகையில் பார்த்தால் சமூக விரோதிகளையும், பிரிவினைவாதிகளையும், அரசியல் பின்னணியில் சட்டம் ஒழுங்கை குலைக்க நினைப்போரையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிறது தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. உண்மையில் இவையெல்லாம் எச்சரிக்கை மணிகள். யாருக்கான எச்சரிக்கை மணி என்பது அவரவர் செயல்பாடில் இருக்கிறது.