தூய்மை பள்ளிகளுக்கான விருது பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் – முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார், அமைச்சர் செங்கோட்டையன்

தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்.

2017-18ஆம் ஆண்டிற்கான, தூய்மை பள்ளிக்கான தேசிய விருது வழங்கும் விழா கடந்த மாதம்18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருது வழங்கினார்.

தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழையும் அவர் வழங்கினார். இந்த பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்துப் பெற்றார்.

இதனிடையே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சிலர், மாற்றியமைக்கப்பட்ட புதிய சீருடைகளை அணிந்து வந்து முதலமைச்சரை சந்தித்தனர்.

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்க, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.

Exit mobile version