தி.மு.க.,வின் அடுத்த அட்டாக் "பேன்ஸி ஸ்டோர்"..!

திருவண்ணாமலை அருகே பேன்ஸி ஸ்டார் உரிமையாளரை திமுகவை சேர்ந்த இருவர், செருப்பால் அடித்து, கடுமையாக தாக்கிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு கும்பலாக சென்ற தி.மு.க.வை சேர்ந்த யுவராஜ், இலவசமாக பிரியாணி கேட்டு, கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து சலசலப்பை ஏற்படுத்தி இருந்தநிலையில், பெரம்பலூரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், அடித்து, உதைத்து, கடுமையாக தாக்கிய, சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரம்பிய திமுக பிரமுகர் கவி. மோசஸ், பணம் கேட்ட ஊழியரை தனது நண்பருடன் சேர்ந்து தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் செல்போன் கடைக்குள் புகுந்த திமுக இளைஞரணியை சேர்ந்த ரகுபதி மற்றும் கணேஷ் ஆகியோர் உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற திமுகவினரின் அத்துமீறல் மற்றும் அராஜகத்தின் நீட்சியாக, திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் பேன்சி ஸ்டோர் உரிமையாளரை திமுகவைச் சேர்ந்த இருவர் செருப்பால் அடித்து, கடுமையாக தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் – தாணிப்பாடி சாலையில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் ராஜேஷ். இவரிடம் திமுகவை சேர்ந்த பூபாலன் மற்றும் பவுன் குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஒருகட்டத்தில், ராஜேஷை அவதூறு வார்த்தைகளால் திட்டியும், செருப்பால் அடித்தும், அவர்கள் கடுமையாக தாக்கினர். கடையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதலால் மனமுடைந்த ராஜேஷ், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய குடும்பத்தினர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாணிப்பாடி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் அராஜகங்களால், திமுகவினர் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version