திமுக – காங்கிரஸ் மீது போர்க்குற்ற விசாரணை – முதலமைச்சர் வலியுறுத்தல்

இலங்கை இறுதிகட்ட போரின்போது, தங்களுக்கு இந்திய அரசு உதவியதாக ராஜபக்சே அண்மையில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக – காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டது.

இதனையொட்டி, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, ” டெல்லி வந்த ராஜபக்சே அப்போது என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி நினைத்து பார்க்க வேண்டும். இலங்கை போரின் போது அப்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார்.

3 மணி நேர நாடகத்திற்கு பிறகு மக்கள் அச்சப்படத் தேவையில்லை போர் நிறுத்தப்பட்டு விட்டது என்றார். அவர் சொன்ன வார்த்தைகளை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். தகுந்த நேரம் பார்த்து விமானம் மூலம் குண்டு மழை பொழிந்து தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.

ஈழத் தமிழர்களின் இந்த படுகொலைக்கு திமுக காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். காலம் தாழ்த்தி ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் என நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு உண்மை அப்போது தெரியவில்லை.

அண்மையில் தான் உண்மை தெரிந்தது. ராஜபக்சே பேட்டி கொடுத்ததால் தான் இந்த உண்மை தெரிந்தது. இவர்கள் போர்க்குற்றம் செய்துள்ளனர். இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். தமிழ், தமிழ் என வாய்கிழிய பேசுகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம். திமுக – காங்கிரஸ் கும்பலை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அண்மையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஸ்டாலின் அதிமுக தவறு செய்தது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தார்.   செயல்பட முடியாத தலைவருக்கு செயல் தலைவர் என பெயர் வைத்தனர். இப்போது அவர் திமுக தலைவராகியுள்ளார்.

திமுக கட்சியல்ல. கம்பெனி. இதற்கு முன்பு சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தார். அதற்கு பிறகு அவரது மகன் தான் வர முடியும். ஈரோட்டில் என்.கே.கே. பெரியசாமி இருந்தார். அவருக்கு பின் அவரது மகன் என்.கே.கே.பி. ராஜா. திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ. பெரியசாமி.

ஆத்தூரில் அவர் எம்.எல்.ஏ. பழனியில் அவரது மகன் எம்.எல்.ஏவாக உள்ளார். இதனை கட்சி என்று எப்படி சொல்ல முடியும். அதிமுகவில் மிட்டா மிராஸ்தார்கள் யாரும் இல்லை.

விஸ்வாசமாக உழைத்தால் யாரும் பதவிக்கு வரமுடியும். இங்குள்ள சித்ரா, அவருக்கு சீட் வழங்கப்பட்டபோது, ஆனந்த கண்ணீர் வடித்தார். திமுகவிற்கு என்ன பொறாமை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தவுடன் அந்த பதவிக்கு வந்துவிடவில்லை.

லாரியை ஏற்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை கொல்ல முயன்றார்கள். சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசும்போது, மைக்கை பிடுங்கினார்கள். செருப்பை வீசினார்கள்.

அப்போது அவர் சொன்னார், இனி இந்த அவைக்குள் முதலமைச்சராகத் தான் நுழைவேன் என்றார். சொன்னது போல், தமிழகத்தின் முதலமைச்சராக நுழைந்தார். அதே போல் சட்டமன்றத்தில் கருணாநிதி இருக்கைக்கு முன்பே, அப்போதைய எதிர்கட்சித் தலைவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கினர்.

அமைச்சர் ஒருவர் அவரது சேலையை பிடித்து, இழுத்தார். அப்போது எம்.ஜி.ஆர். போலவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், இனி இந்த அவைக்குள் முதலமைச்சராக நுழைவேன் என கூறி வெளியேறினார்.

சொன்னது போலவே அவரும் முதலமைச்சராக நுழைந்தார். அவர்கள் இருவருக்கும் நெருக்கடி கொடுத்தது போலவே நமக்கும் இப்போது நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஆனால் இவர்கள் எப்படி நெருக்கடி கொடுத்தாலும் பரவாயில்லை. அதிமுகவினர் இரும்பு மனம் படைத்தவர்கள். உழைக்கக் கூடியவர்கள். உங்களைப் போல் அடுத்தவர் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல அதிமுகவினர்.

 ஒரே தொகுதியில் 9 முறை நின்றுள்ளேன். உங்களை போல் பதவி வெறி பிடித்தவர்கள் நாங்கள் அல்ல. நீங்கள் முதலமைச்சர் கனவு தான் காண முடியும்.

முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்டாலின் லண்டன் செல்கிறார். எதற்கு லண்டன் செல்கிறார் எனத் தெரியவில்லை. நீங்கள் வந்த விதம் வேறு, நாங்கள் வந்த விதம் வேறு. உங்கள் அப்பா, முதலமைச்சராக இருந்தார்.

நீங்கள் சீட் வாங்கி எம்.எல்.ஏ ஆனீர்கள். நான் அப்படி அல்ல. கிளைக் கழக செயலாளராக இருந்தவன். ஒன்றியப் பதவி, மாவட்ட பதவி, தலைமைப் பதவி என உழைத்து முன்னுக்கு வந்தேன்.” இவ்வாறு பேசினார்.

Exit mobile version