நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

அமெரிக்காவின் நாசாவுக்கு செல்லும், நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9 ஆம் வகுப்பு மாணவி அபிநயா நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார் என்ற செய்தியை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். அபிநயாவுக்கு, தமிழக அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா, கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் பல சாதனைகள் படைத்து, தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துவதாக  குறிப்பிட்டுள்ளார்.

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அவரது சாதனையை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அபிநயாவுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version