தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து வருத்தம் தெரிவித்தது சரி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலத்தில் உள்ள தந்தை பெரியார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மக்களைத் திரட்டி ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஃபேல் போர் விமான ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவி விலக மறுத்தால், தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
சைதாப்பேட்டையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தது சரி எனவும், ஆனால் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாகப் பேசிய எச்.ராஜா, காவல்துறை பாதுகாப்புடன் அவர் பொதுக்கூட்டத்தில் பேசி வருவது வருத்தம் அளிப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.