5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகம் வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர், ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல், இடைநிலை ஆசியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைக் களைதல் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். அத்துடன், அக்டோபர் 4 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் 114 சங்கங்களைச் சேர்ந்த 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, காலவரையற்ற போராட்டத்தை வலியுறுத்தும் விதமாக அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.