மத்திய பிரதேசத்தில் சுங்க சாவடி ஊழியர்களை பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 28ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பாஜக மாநில தலைவரும் எம்.பி. யுமான நந்தகுமார் சிங் சவுகான், தனது உதவியாளர்களுடன் காரில் சென்றார்.
அப்போது குணா அருகே அவரது காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர், எம்.பி. என்பதற்கான அடையாள சான்றினை காண்பிக்கும்படி அங்கிருந்த ஊழியர்கள் சவுகானிடம் கேட்டுள்ளனர்.
இது வாக்கு வாதமாக மாறியதால் காரில் இருந்து வெளியே வந்த சவுகான் மற்றும் அவரது உதவியாளர்கள் சுங்க சாவடி காவலர் ஊழியர்களை சரமாரியாக தாக்கத்தொடங்கினர்.
ஊழியர்களின் 2 வாக்கி டாக்கிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் பற்றி எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. அதே நேரம் சுங்க சாவடியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்பாடுத்தி உள்ளது.