பற்றி எரியும் மணிப்பூர்.. கலவரம் கடந்து வந்த பாதை.. என்னதான் நடக்குது? விரிவாக பார்க்கலாம்!

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மோதலின் தொடக்கம் தொடங்கி, கடந்த சில நாட்களாக தலைப்பு செய்தியாகும் வகையில் சம்பவங்கள் நடந்து வருவது வரை டைம் லைனில் பார்ப்போம்.

மணிப்பூரில் நடப்பது என்ன?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 30 முதல் 35 லட்சம் தான். இங்கு, குக்கி, நாகா உள்ளிட்ட 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினப் பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஓர் அணியிலும், மெய்தேயி எனப்படும் மக்கள் ஒரு அணியாகவும் திரண்டுள்ளனர். மாநில மக்கள் தொகையில், 64 சதவீதத்தை மெய்தேயி மக்கள் நிரப்பியுள்ளனர்.

பட்டியல் சாதியினரான மெய்தேயி மக்கள், குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அவர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால், பெரும்பான்மையாக இருக்கும் மெய்தேயி சமூகத்தினரை பழங்குடியினராக அறிவித்தால், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என அனைத்து பழங்குடியினர் சங்கமும் வாதத்தை முன்வைக்கிறது. இதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது.

2013:

தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்கக்கோரி மெய்தேயி மக்கள் 2013 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 19, 2023:

மெய்தேயி மக்களின் கோரிக்கை மனுவை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் அவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது

ஏப்ரல் 27, 2023:

இந்த நிலையில், சுராசந்த்பூரில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியின் மேடைக்கு மர்மகும்பல் தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது

ஏப்ரல் 28, 2023:

வன்முறை தலைதூக்கியதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 நாள்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.

மே 3, 2023 :

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் “ஆதிவாசி ஏக்தா மார்ச்” என்ற பெயரில் பேரணி நடத்தியது.

மே 3, 2023:

பழங்குடியினர் பேரணியின்போது விஷ்ணுபூர், சுராசந்த்பூர் மாவட்டங்களில் மெய்தேயி பிரிவினர் எதிர் போராட்டங்களை மேற்கொண்டதால் வன்முறை வெடித்தது. இது தலைநகர் இம்பாலிலும் எதிரொலித்தது. மெய்தேயி சமூகத்தினர், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அவர்களது வீடு, தேவாலயங்கள், சமுதாய கூடங்களுக்கு தீ வைத்தனர்.

மே 4, 2023:

பிரபல பெண் குத்துச்சண்டை வீரர் மேரிகோம், “என் மாநிலம் பற்றி எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்” என மத்திய அரசுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார்.

கலவரத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட கால அவகாசத்துடன் மொபைல் இன்டர்நெட் சேவைகளை ரத்து செய்தது மணிப்பூர் மாநில அரசு.

மே 5, 2023:

வன்முறை வெறியாட்டம் அதிகரித்த நிலையில், மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவிட்டது.

மே 7, 2023:

வன்முறையின்போது காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வன்முறையாளர்களால் திருடப்பட்டன.

மே 26, 2023:

மணிப்பூர் தலைநகர் இம்பாலின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

ஜூன் 1, 2023:

வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி மணிப்பூர் டிஜிபி டங்கல் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக டிஜிபியாக ராஜிவ் சிங் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 16, 2023:

தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூன் 24, 2023:

மணிப்பூர் அமைச்சர் சுசிந்த்ரோ சிங்கரேல் என்பவருக்குச் சொந்தமான குடோனை வன்முறையாளர்கள் தீக்கிரையாக்கினர் .

ஜூலை 15, 2023:

நாகா பழங்குடியைச் சேர்ந்த 55 வயது பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெய்தேயி பிரிவைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

ஜூலை 20, 2023:

மே 4ஆம் தேதி, பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பல மர்மங்களும், சிக்கல்களும் நிறைந்த மணிப்பூரின் பூகோள அமைப்பைப் போலவே, அங்கு என்ன நடக்கிறது என்பதும் வெளிச்சத்துக்கு வராமல் மர்மமாகவே உள்ளது. மணிப்பூரில் தற்போது தொடரும் நிலை விலகி, அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Exit mobile version