சிறார்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் கிரிமினல் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கிரிமினல் குற்றவாளிகள் நேரடியாக குற்றச்செயல்களில் ஈடுபடாமல், சிறார்களுக்கு போதை பொருளை கொடுத்து அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கஞ்சா மற்றும் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் மாணவர்களுக்கு செலுத்திய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான நபர், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவரின் சீட்டு இல்லாமல், வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்தனர்.

மேலும் போதை தரும் மருந்துகளை சட்ட விரோதமாக விற்றதாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன எனவும், எத்தனை மருந்தகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என அடுத்தடுத்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Exit mobile version